ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம்


ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
x
தினத்தந்தி 4 Sep 2021 12:22 AM GMT (Updated: 4 Sep 2021 12:24 AM GMT)

ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுடெல்லி,

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்தது. அதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒருவர் மற்றவரது நாட்டு ராணுவ தளங்களை எரிபொருள் நிரப்பவும், பழுது பார்க்கவும் பயன்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தமும் அதில் அடங்கும். உயர் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், வானில் ஏவப்படும் ஆளில்லா விமான தயாரிப்பில் ஒத்துழைப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கையில், இந்திய ராணுவ அமைச்சகமும், அமெரிக்க பாதுகாப்பு துறையும் கையெழுத்திட்டன. இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story