புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன்


புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 4 Sep 2021 8:27 AM GMT (Updated: 4 Sep 2021 8:27 AM GMT)

கொரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாட வேண்டும் என்று அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி, 

நாடு முழுவதும் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றும், தெலுங்கானாவில் உள்ளதை போன்று புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story