ஜனநாயகத்துக்கு சட்டம்-ஒழுங்கு மிகவும் முக்கியமானது: அமித்ஷா


ஜனநாயகத்துக்கு சட்டம்-ஒழுங்கு மிகவும் முக்கியமானது: அமித்ஷா
x
தினத்தந்தி 4 Sep 2021 6:42 PM GMT (Updated: 4 Sep 2021 6:42 PM GMT)

ஜனநாயகத்துக்கு சட்டம்-ஒழுங்கு மிகவும் முக்கியமானது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

பி.பி.ஆர்.டி. நிறுவன தினம்
போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறையின் (பி.பி.ஆர்.டி.) 51-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகம் நிலைக்க முடியாது
ஜனநாயகம், நமது நாட்டின் இயல்பானது. ஜனநாயகத்தில் மிகப்பெரிய விஷயம், ஒரு நபரின் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகும். இது சட்டம்-ஒழுங்குடன் நேரடி தொடர்பு கொண்டது.அந்தவகையில் ஜனநாயகத்துக்கு சட்டம்-ஒழுங்கு மிகவும் முக்கியமானது ஆகும். சட்டம்-ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் நிலைக்க முடியாது.
ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்தும் கட்சிகளுக்கு வாக்களிப்பது மட்டுமல்ல. மாறாக, ஜனநாயகம் என்பது மக்கள் முன்னேறவும் வாய்ப்பளிப்பதாகும்.

மிகப்பெரிய பங்கு
நாடாளுமன்றம், மாநில சட்டசபைகள், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் ஊழல் கண்காணிப்பு கமிஷனர்கள் போன்ற நிறுவனங்கள் இந்திய ஜனநாயகத்தை எவ்வாறு வெற்றிகரமாக ஆக்கின? என்பது பற்றிய விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்ததாக நிறைய விவாதங்கள் உள்ளன.எனினும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் போலீஸ்காரரின் ரிதம்தான் ஜனநாயகத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்வதாக நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். உள்துறை மந்திரி என்பதால் இதை நான் சொல்லவில்லை. அதுதான் உண்மை ஆகும்.நாட்டின் போலீஸ் படைகளுக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்கும் ஒரு முக்கியமான நிறுவனம், பி.பி.ஆர்.டி. ஆகும். போலீசின் இந்த ரிதத்தை மேலும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் மேம்படுத்த பி.பி.ஆர்.டி. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

35 ஆயிரம் பேர் சாவு
போலீசாரின் சிறந்த பணிகள் கவனிக்கப்படாமல், அவர்களது மோசமான பக்கங்கள்தான் அடிக்கடி தெரிகிறது. போலீசாரை மோசமாக காட்டும் பிரசாரமும் நடந்து வருகிறது.ஆனால் முழு அரசு அமைப்பிலும் மிகவும் கடினமான பணி காவல்துறையினருடையது. இது கொஞ்சமாவது அங்கீகரிக்கப்பட வேண்டும்.75 ஆண்டுகளில் 35,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இறந்துள்ளனர். அனைத்து போர்களிலும் கூட இத்தனை வீரர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் காவல்துறை நினைவிடம் கட்டப்பட்டுள்ளது,

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

மேலும் கொரோனா காலத்தில் போலீசார் மேற்கொண்ட அளப்பெரிய பணிகளையும் அவர் பாராட்டினார்.

Next Story