காஷ்மீர் விவகாரம்; தலீபான்கள் பேச்சுக்கு முக்தர் அப்பாஸ் நக்வி பதிலடி


காஷ்மீர் விவகாரம்; தலீபான்கள் பேச்சுக்கு  முக்தர் அப்பாஸ் நக்வி பதிலடி
x
தினத்தந்தி 4 Sep 2021 7:23 PM GMT (Updated: 4 Sep 2021 7:23 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவோம் என தலீபான்களே மறைமுகமாக அறிவித்து இருந்தனர்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சியை அகற்றி விட்டு ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு தலீபான்களின் புதிய அரசு விரைவில் அமைய இருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதால் சர்வதேச சமூகம் மிகுந்த கவலை கொண்டிருக்கிறது. அந்தவகையில் இந்தியாவும் கவலை வெளியிட்டிருந்தது. குறிப்பாக காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு தங்கள் மண்ணை பயன்படுத்த தலீபான்கள் அனுமதிப்பார்கள் என்ற அச்சம் இந்தியாவில் ஏற்பட்டு உள்ளது.

இதை தோகாவில் சமீபத்தில் நடந்த தலீபான்களுடனான சந்திப்பின்போதும் இந்தியா எழுப்பி இருந்தது. அதாவது, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாரும் ஆப்கானிஸ்தானை பயன்படுத்த அனுதிக்கக்கூடாது என இந்திய தூதர் தீபக் மிட்டல், தலீபான் பிரதிநிதி முகமது அப்பாஸ் ஸ்டனிக்சாயிடம் எடுத்துரைத்திருந்தார்.அதற்கு, இந்த பிரச்சினை நேர்மறையாக கையாளப்படும் என தலீபான்கள் பதிலளித்திருந்தனர். ஆனால் இந்தியாவின் கவலையை உறுதி செய்யும் வகையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவோம் என தலீபான்களே மறைமுகமாக அறிவித்து உள்ளனர்.

தலீபான்களின் தோகா அரசியல் அலுவலக செய்தி தொடர்பாளர் சுகைல் ஷகீன் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-

காஷ்மீர் உள்பட உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். அதாவது, முஸ்லிம்கள் உங்கள் மக்கள், உங்கள் சொந்த குடிமக்கள், உங்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் 
சம உரிமை உண்டு என அந்தந்த நாடுகளுக்கு நாங்கள் வலியுறுத்துவோம்.காஷ்மீர் மற்றும் வேறு எந்த நாட்டிலும் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பது, முஸ்லிம்கள் என்ற முறையில் எங்கள் அமைப்பின் உரிமை ஆகும். இவ்வாறு சுகைல் ஷகீன்  கூறியிருந்தார்.

தலீபான்களுக்கு பதிலடி

தலீபான்களின் இத்தகைய பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள  மத்திய அமைச்சரும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:- நான் தலீபான்களிடம்  இருகரம் கூப்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட்டுவிடுங்கள். இங்கு மசூதிகளில் தொழும் முஸ்லிம்கள் யாரும் துப்பாக்கி தோட்டாக்களாலும், வெடிகுண்டுகளாலும் தாக்கப்படவில்லை. பெண் குழந்தைகள் பள்ளி செல்வதை யாரும் தடுக்கவில்லை. 

அவர்களின் தலைகள், கால்கள் வெட்டப்படவில்லை. இந்த அரசு அரசியலைமைப்புச் சட்டத்தை பின்பற்றி நடக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமான உரிமை, முழுமையான வளர்ச்சி, ஒவ்வொருவரின் பங்களிப்புக்கும் உறுதி செய்து அதன்படி செயல்படுகிறது” என்றார். 

Next Story