மராட்டியத்தில் கொரோனா தடுப்பு பணியில் புதிய சாதனை


மராட்டியத்தில் கொரோனா தடுப்பு பணியில் புதிய சாதனை
x
தினத்தந்தி 4 Sep 2021 8:12 PM GMT (Updated: 4 Sep 2021 8:13 PM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் மும்பை மற்றும் மாநிலத்தின் சில இடங்களில் சமீப நாட்களாக கொரோனா தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது.

புதிய சாதனை
கொரோனா பரவல் வேகமாக இல்லாவிட்டாலும், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மக்கள் அதிகளவில் வெளிவர தொடங்கி உள்ளனர். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணியை மராட்டியம் முடுக்கி விட்டு உள்ளது. இதில் நேற்று புதிய மைல்கல்லாக 11 லட்சத்து 91 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்து இருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.இதற்கு முன்பு கடந்த மாதம் 21-ந் தேதி 11 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்ததே அதிகபட்சமாகும்.

2-வது மாநிலம்
இதுகுறித்து மராட்டிய சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் கூறுகையில், "இரவு 7 மணி வரை தடுப்பூசி போடப்பட்டதில் மேற்கண்ட புள்ளி விவரம் கிடைத்து உள்ளது. அதன்பிறகும் சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நீடித்தது. எனவே நாளை (இன்று) இறுதி நிலவரம் தெரியவரும்" என்றார்.
சுகாதாரத்துறை தகவலின் படி, இதுவரை மாநிலம் முழுவதும் 1 கோடியே 71 லட்சம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தை அடுத்து அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்ட மாநிலமாக மராட்டியம் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மும்பை
இதற்கிடையே மும்பையில் நேற்று முன்தினம் நிலவரப்படி தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது. அதன்படி 1 கோடியே 63 ஆயிரத்து 497 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியதில் 1 கோடியை தாண்டிய முதல் மாவட்டம் மும்பை என்ற சிறப்பை பெற்று உள்ளது.இதில் 72 லட்சத்து 75 ஆயிரத்து 134 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். 27 லட்சத்து 88 ஆயிரத்து 363 பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டு உள்ளனர். மராட்டியத்தில் 3-வது அலை தலைகாட்டும் அச்சுறுத்தல் இருப்பதால் கொரோனா தடுப்பு பணியில் முக்கிய ஆயுதமாக கருதப்படும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும்
இதற்கிடையே இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 62.25 லட்சம் டோஸ்கள் (இரவு 7 மணி நிலவரப்படி) போடப்பட்டன. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 68 கோடியை கடந்து விட்டது. இதில் 52.38 கோடி டோஸ்கள் முதல் டோசாகவும், 15.99 கோடி டோஸ்கள் 2-வது டோசாகவும் போடப்பட்டு உள்ளன. இதைப்போல 18-44 வயது பிரிவினரில் 26.99 கோடி பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 3.35 கோடி பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டு உள்ளது. கொரோனாவை ஒழிக்கும் ஆயுதங்களில் தடுப்பூசி முக்கியமானதாக கருதப்படும் நிலையில், இந்த பணிகளை மத்திய-மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Next Story