கர்நாடகாவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் எதிர்ப்பு


கர்நாடகாவில்  தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ்  எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 11:25 PM GMT (Updated: 4 Sep 2021 11:25 PM GMT)

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது என்றும், இதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநிலத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பா.ஜனதா அரசு தீவிரம் காட்டுவது சரியல்ல. இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து சட்டசபையிலேயோ, கர்நாடக மேல்-சபையிலேயோ எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. அதனால் கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. நானும் கல்வித்துறையில் பல அனுபவங்களை கொண்டுள்ளேன். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்துள்ளேன்.

இந்த புதிய கல்வி கொள்கையால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பயன்கள் என்ன?, சாதகம் மற்றும் பாதகம் என்ன? என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. புதிய கல்வி கொள்கை பற்றி ஆசிாியர்கள், மாணவ, மாணவிகள், நிபுணர்களிடம் கேட்டும், அவர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. அப்படி இருக்கும் போது புதிய கல்வி கொள்கை குறித்து யாரிடம் இந்த அரசு கருத்து கேட்டது.

புதிய தேசிய கல்வி கொள்கையை அவசர கதியில் கா்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமல்படுத்த துடிப்பது ஏன்?. எந்த ஒரு விவாதமும் நடைபெறாமல் அந்த கல்வி கொள்கையை எதற்காக அமல்படுத்த வேண்டும். இந்த புதிய கல்வி கொள்கையால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் பீதியில் உள்ளனர். இந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். இந்த கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதை கர்நாடக பா.ஜனதா அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். சட்டசபையில் இதுபற்றி விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக சட்டசபையில் காங்கிரஸ் குரல் எழுப்புவோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story