கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது; மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட வேண்டாம்: உத்தவ் தாக்கரே


கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது; மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட வேண்டாம்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 5 Sep 2021 8:46 PM GMT (Updated: 5 Sep 2021 8:46 PM GMT)

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி போராட்டம் நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் சில தினங்களாக மும்பை உள்பட பல இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முழுமையான தளர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா அச்சம் காரணமாக பூட்டிக்கிடக்கும் கோவில்களை உடனடியாக திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி வருகிறது.இதேபோல பள்ளி, கல்லூரிகளையும் முழுமையாக திறக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார்.மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மாநில கொரோனா பணிக்குழு உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலமாக கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

அரசியல் செய்யவேண்டாம்...
கொரோனா சமயத்தில் சில கட்சிகள் அரசியலில் ஈடுபடுவதையும், கூட்டத்தை தவிர்க்க முடியாத இடங்களை மீண்டும் திறக்க கோரிக்கை வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம். நீங்கள் போராட்டம் நடத்துங்கள். அந்த போராட்டம் கொரோனா வைரசுக்கு எதிராக இருக்கவேண்டும். கொரோனா 3-வது அலையை தடுப்பது அல்லது அதை திரும்ப அழைப்பதும் நம் கையில் தான் உள்ளது.வேறு எந்த மாநிலங்களும் செய்ய முடியாத அளவுக்கு கொரோனா தொற்றுநோயை சமாளிக்க சுகாதார கட்டமைப்பை மராட்டிய அரசு மேம்படுத்தி உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை
ஆனால் ஆக்சிஜன் உற்பத்தியில் தான் நாம் பற்றாக்குறையாக இருக்கிறோம். தற்போது நமது தினசரி ஆக்சிஜன் உற்பத்தி 1,200 முதல் 1,300 மெட்ரிக் டன் ஆகும். இது மருத்துவ தேவைக்காக, சில தொழில்துறை தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக இரும்பு, கண்ணாடி மற்றும் சில மருந்துகள் தயாரிக்கவும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.தற்போது கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு தினசரி 150 மெட்ரிக் டன் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது.

ஆக்சிஜன் கிடைக்காது
கொரோனா 2-வது அலையின்போது மாநிலத்தில் தினமும் 1,700 முதல் 1,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. இதை மாற்ற மாநிலங்களில் இருந்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தற்போது 1,400 மெட்ரிக் டன்னில் இருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன்னான அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் இதற்கு நேரம் எடுக்கும்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மற்ற மாநிலங்களில் இருந்து போதிய அளவு ஆக்சிஜன் நமக்கு கிடைக்காது. எனவே ஆக்சிஜன் கிடைப்பதை பொருத்தே மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

பாதிப்பு அதிகரிப்பு
தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கடந்த சில நாட்களில் தினசரி பாதிப்பு சிறிது அதிகரித்துள்ளது.நாம் கூட்டத்தை தவிர்க்கவேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும். எதிரி இன்னும் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை. அதன் தடித்த வால் இன்னும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story