தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது: சுப்ரீம் கோர்ட்டு


தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது: சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 6 Sep 2021 5:57 PM GMT (Updated: 6 Sep 2021 5:57 PM GMT)

தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

காலியிடங்களை நிரப்பக்கோரி மனு
நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இதில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், பல்வேறு தீர்ப்பாயங்களில் 250 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்பாமல் தீர்ப்பாயங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது.

கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என தெரிகிறது. எனவே எங்களுக்கு முன்னால் 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் அல்லது தீர்ப்பாயங்களை மூட வேண்டும். தீர்ப்பாயங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே நியமனங்களை செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். செயலற்று கிடக்கும் தீர்ப்பாயங்களுக்கு மத்திய அரசு என்ன மாற்று ஏற்பாட்டை கொண்டுள்ளது? மத்திய அரசுடன் முரண்பட விரும்பவில்லை என தெரிவித்தனர்.அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுப்ரீம் கோர்ட்டுடன் மத்திய அரசும் முரண்பட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மேலும் அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தார்.

மீண்டும் காலக்கெடு
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்களை வருகிற 13-ந் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் காலக்கெடு விதித்தனர். தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story