கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி


கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி
x
தினத்தந்தி 6 Sep 2021 6:03 PM GMT (Updated: 6 Sep 2021 6:03 PM GMT)

கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. பெலகாவியில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திய மராட்டிய அமைப்பு படுதோல்வியை சந்தித்தது.

கர்நாடகத்தில் உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளில் கடந்த 3-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

மாநகராட்சி தேர்தல்
இந்த தேர்தலில் 3 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ் போட்டியிட்டது. உப்பள்ளி-தார்வார், கலபுரகியில் ஜனதா தளம் (எஸ்) போட்டியிட்டது. பெலகாவியில் தேசிய கட்சிகளுக்கு இணையாக மராட்டிய எகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்.) அமைப்பு வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 1,105 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் பா.ஜனதா சார்பில் 184 பேரும், காங்கிரஸ் சார்பில் 182 பேரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 102 பேரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 94 பேரும் களத்தில் இருந்தனர். கடந்த 3-ந்தேதி நடந்த தேர்தலில் உப்பள்ளி-தார்வாரில் 53.81 சதவீதமும், பெலகாவியில் 50.41 சதவீதமும், கலபுரகியில் 49.40 சதவீத வாக்குகளும் பதிவாயின. இந்த நிலையில் 3 மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் திட்டமிட்டப்படி நேற்று எண்ணப்பட்டன.

பெலகாவி மாநகராட்சி
இதில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல், உப்பள்ளி-தார்வார், பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஆளும் பா.ஜனதா கட்சி அதிக வார்டுகளில் முன்னிலையில் இருந்து வந்தது. கலபுரகியில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பெலகாவியில் பா.ஜனதா முன்னிலையில் வந்ததை கண்டு அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அங்கு பலம் வாய்ந்த எம்.இ.எஸ். அமைப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது. முதல் முறையாக பெலகாவி மாநகராட்சியை பா.ஜனதா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் அங்கு நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வந்த எம்.இ.எஸ். அமைப்பு படுதோல்வி அடைந்துள்ளது. அதே போல் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியிலும் 39 வார்டுகளில் வெற்றி பெற்று பா.ஜனதா பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் கலபுரகி மாநகராட்சியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா அங்கு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் இறுதியில், 82 வார்டுகளை கொண்ட உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் பா.ஜனதா 39 வார்டுகளிலும், காங்கிரஸ் 33 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி ஒரு இடத்திலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

தரிகெரேயில் காங். வெற்றி
58 வார்டுகளை கொண்ட பெலகாவி மாநகராட்சியில் பா.ஜனதா 35 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒரு இடத்திலும், எம்.இ.எஸ். உள்பட பிற கட்சியினர் 12 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 55 வார்டுகளை கொண்ட கலபுரகியில் காங்கிரஸ் 27 வார்டுகளிலும், பா.ஜனதா 23 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 4 இடங்களிலும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர். அந்த மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கான தேர்தலில் உள்ளூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்கும் ஓட்டுரிமை உண்டு. அதன்படி பார்த்தால் பெலகாவியுடன் கலபுரகி, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சிகளையும் பா.ஜனதா கைப்பற்றுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

அதே போல், 31 வார்டுகளை கொண்ட தொட்டபள்ளாபுரா நகரசபை தேர்தலில், 12 வார்டுகளில் பா.ஜனதாவும், 9 வார்டுகளில் காங்கிரசும், 7 வார்டுகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே புரசபையை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 23 வார்டுகளை கொண்ட அந்த புரசபையில் 15 வார்டுகளில் காங்கிரசும், ஒரு வார்டில் பா.ஜனதாவும், 7 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பீதர் நகரசபையில் 2 வார்டுகள், பத்ராவதி நகரசபையில் ஒரு வார்டுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது. பீதரில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலா ஒரு இடத்திலும், பத்ராவதியில் ஒரு வார்டிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் வெற்றி பெற்றது.

21 வார்டுகளுக்கு இடைத்தேர்தல்
அது தவிர 20 நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 21 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 8 வார்டுகளில் காங்கிரசும், 7 வார்டுகளில் பா.ஜனதாவும், 3 வார்டுகளில் ஜனதா தளம் (எஸ்) கட்சியும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.ஆகமொத்தம் 272 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 117 வார்டுகளில் பா.ஜனதாவும், 103 வார்டுகளில் காங்கிரசும், 16 வார்டுகளில் ஜனதா தளம் (எஸ்) கட்சியும், பிற கட்சிகள் உள்பட சுயேச்சைகள் 36 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி கொண்டாட்டம்
3 மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளம் முழங்கியும் ஆடி-பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story