பவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு


பவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு
x
தினத்தந்தி 7 Sep 2021 2:16 AM GMT (Updated: 7 Sep 2021 2:16 AM GMT)

அரசியல் நன்றியுணர்வை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிக்காட்டவில்லை என்று மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பவானிபூர் தொகுதிக்கு வரும் 30-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவர் தனது முதல்-மந்திரி பதவியை தக்கவைக்க வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இடது முன்னணியுடன் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த ஜூலை முதல் தேசிய அளவில் நல்லிணக்கம் நிலவுவதால், மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற கருத்தில் மாநில காங்கிரஸ் இருந்தது. அதற்கு எதிராக தற்போதைய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நன்றியுணர்வை திரிணாமுல் வெளிக்காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Next Story