நாடு முன்னேற கல்வி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி


நாடு முன்னேற கல்வி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Sep 2021 5:03 PM GMT (Updated: 7 Sep 2021 5:03 PM GMT)

நாடு முன்னேற கல்வி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

சைகை மொழி அகராதி
மத்திய கல்வி அமைச்சகம், கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதிவரை ‘சிக்ஷாக் பர்வ்’ என்ற பெயரில் கல்வி திருவிழாவாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி, கல்வி திருவிழா மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது, கல்வித்துறையின் 5 புதிய முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைத்தார். கேட்கும் திறன் குறைந்தவர்களுக்காக இந்திய சைகை மொழி அகராதி, பார்வைத்திறன் குறைந்தவர்களுக்காக, பேசும் புத்தகங்கள் எனப்படும் ஆடியோ புத்தகங்கள், சி.பி.எஸ்.இ.க்கான பள்ளி தர உறுதிப்பாடு மற்றும் மதிப்பீட்டு திட்டம், ‘நிஷ்தா’ ஆசிரியர் பயிற்சி திட்டம், வித்யாஞ்சலி வலைத்தளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

சமமான கல்வி

அப்போது, மோடி பேசியதாவது:-
எந்த நாடும் முன்னேற வேண்டுமானால், கல்வியானது அனைவரையும் உள்ளடக்கியதாக மட்டுமின்றி, அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதை கருத்தில்கொண்டு, பேசும் புத்தகங்களையும், சைகை மொழி அகராதியையும் கல்வியின் அங்கமாக கொண்டு வந்துள்ளோம். இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட முன்முயற்சிகள், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானவை. இவை நமது கல்விமுறையை உலக அளவில் போட்டியிடும்வகையில் உயர்த்துவதுடன், இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்தும்.

கொரோனா சவால்கள்
நமது கல்வித்துறையை உலகத்தரமானதாக மாற்ற கற்பித்தல்-கற்றல் பணியை தொடர்ந்து மறுவரையறையும், மறுவடிவமைப்பும் செய்ய வேண்டும். வேகமாக மாறி வரும் சகாப்தத்தில், ஆசிரியர்கள் புதிய முறைகளையும், தொழில்நுட்பங்களையும் வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில், நமது கல்வித்துறையில் ஏராளமான சவால்கள் உருவெடுத்தன. அவற்றுக்கு வேகமாக தீர்வு கண்டோம். ஆன்லைன் வகுப்பு, குரூப் வீடியோ அழைப்பு, ஆன்லைன் தேர்வு போன்ற வார்த்தைகளையே இதற்கு முன்பு நிறையபேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

ஒலிம்பிக் வீரர்கள்
கடந்த 7 ஆண்டுகளில், முடிவு எடுப்பதில் மக்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாக உள்ளனர். சுதந்திர தின 75-ம் ஆண்டுவிழாவையொட்டி, ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story