மேற்குவங்காளம் : பா.ஜ.க. எம்.பி.வீடு மீது வெடிகுண்டு வீச்சு


மேற்குவங்காளம் : பா.ஜ.க. எம்.பி.வீடு மீது வெடிகுண்டு வீச்சு
x
தினத்தந்தி 8 Sep 2021 8:32 AM GMT (Updated: 8 Sep 2021 8:32 AM GMT)

எம்.பி., அர்ஜூன் சிங் வீட்டருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என கவர்னர் கூறி உள்ளார்.

கொல்கத்தா

மேற்குவங்காளம் பாரக்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி.,யாக இருப்பவர் அர்ஜூன் சிங். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், கடந்த 2019ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.கவில் சேர்ந்தார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அர்ஜூன் சிங் வீடு  கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஜகதால் பகுதியில் உள்ளது. இன்று காலை 6:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், அர்ஜூன் சிங் வீட்டருகே 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கதவுகள் லேசாக சேதம் அடைந்தன.அர்ஜூன் சிங், தற்போது டெல்லியில் உள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார், மேற்குவங்காளத்தில் வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. 

எம்.பி., அர்ஜூன் சிங் வீட்டருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என கூறி உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் என பா.ஜ.க மாநில தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார். இதனை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், பா.ஜ.க,வில் நடக்கும் உட்கட்சி மோதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Next Story