ஜார்கண்ட் சட்டசபையில் கடும் அமளி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம்


ஜார்கண்ட் சட்டசபையில் கடும் அமளி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம்
x
தினத்தந்தி 8 Sep 2021 10:30 PM GMT (Updated: 8 Sep 2021 10:30 PM GMT)

ஜார்கண்ட் மாநில சட்டசபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி,  

ஜார்கண்ட் மாநில சட்டசபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பா.ஜ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் மாநில சட்டசபையில் நேற்று மதிய உணவு இடைவேளைக்குப் பின் கூட்டம் தொடங்கியது.

அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தை அக்கட்சி எம்.எல்.ஏ. ஆனந்த் ஓஜா எழுப்பினார். தொடர்ந்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு ஜனநாயக குரல்வளையை நெரிக்க முயல்வதாக குற்றம்சாட்டினர்.

அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், மேஜை மீது ஏறி நின்றனர். காகிதங்களை கிழித்து எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் செய்த முயற்சி பலனளிக்கவில்லை.

அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மையப் பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த அமளி, பரபரப்புக்கு இடையிலும் 3 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story