தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 9 Sep 2021 1:32 AM GMT (Updated: 9 Sep 2021 1:32 AM GMT)

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில்...
தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ.) பெண்களை சேர்ப்பது தொடர்பாக வக்கீல் குஷ் கல்ரா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு அகாடமி வாயிலாக ஏன் பெண்கள் ராணுவத்தில் சேரக்கூடாது? இரு பாலரும் சேர்ந்து படிப்பதில் பிரச்சினையா? மத்திய அரசின் கொள்கை முடிவு, பாலின வேறுபாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத தகுதிவாய்ந்த பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக உரிய அறிவிக்கையை யு.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெண்களையும் சேர்க்க முடிவு
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக செப்டம்பர் 22-ந் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story