2 நாள் பயணமாக ஜம்மு சென்றார் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை + "||" + Rahul Gandhi Pathayathri to Vaishnavi Devi Temple in Jammu on a 2 day trip
2 நாள் பயணமாக ஜம்மு சென்றார் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை
ஜம்முவுக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார்.
ஜம்மு,
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று ஜம்மு சென்றார். விமான நிலையத்தில் அவரை காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் தலைமையில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.
ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் முக்கியமாக, ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைப்பகுதியில் உள்ள மாதா வைஷ்ணவி கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எனவே இதற்காக அவர் வைஷ்ணவி தேவி கோவில் புனித பயணத்துக்கான மலை அடிவார முகாம் அமைந்துள்ள கத்ராவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பாதயாத்திரையாகவே கோவிலுக்கு சென்றார்.
மலை மீது அமைந்துள்ள இந்த குகைக்கோவிலில் அவர் வழிபாடு செய்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உடன் சென்றனர்.
அரசியல் கருத்துகள் கூறமாட்டேன்
முன்னதாக கத்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘இங்கிருந்து (கத்ரா) நான் எந்த அரசியல் கருத்துகளும் கூறப்போவதில்லை’ என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் 2 நாள் பயணத்தின் முதல் நாளான நேற்று வேறு எந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் திட்டமிடப்படவில்லை.
வைஷ்ணவி தேவி கோவிலில் வழிபாடுகளை முடித்து விட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அவர் திரிகுடா நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மதிய உணவுக்குப்பின் கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து விட்டு, பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.
2-வது முறை பயணம்
காஷ்மீருக்கு ராகுல் காந்தி கடந்த மாதம் 10-ந்தேதி சென்றிருந்தார். 30 நாட்களுக்குள் அவர் 2-வது முறை பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அப்போது தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஹஷ்ரதால் தர்கா மற்றும் கீர் பவானி கோவிலுக்கும் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.