பவானிப்பூர் தொகுதி; மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு


பவானிப்பூர் தொகுதி; மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 9:02 AM GMT (Updated: 2021-09-10T14:32:59+05:30)

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. தேர்தலில்  திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தபோதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

இருப்பினும்  மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இதனால்,  6 மாதங்களில் தேர்தலில்  போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாக வேண்டிய கட்டாயம் இருந்தது.  இதையடுத்து, மம்தா பானர்ஜி முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். 

இதனால் காலியான பவானிபூா் உள்பட மேற்கு வங்கத்தில் காலியாக  இருந்த  3 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர். 

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில்  மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா திப்ரூவல், ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

Next Story