உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரியங்கா ஆலோசனை


உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரியங்கா ஆலோசனை
x
தினத்தந்தி 10 Sep 2021 11:03 PM GMT (Updated: 10 Sep 2021 11:03 PM GMT)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை பிரியங்கா சந்தித்து வருகிறார். முதலாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்கிறார்.

லக்னோ,

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. இதற்காக பிரியங்கா அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவர் நேற்று முன்தினம் பிற்பகலில் லக்னோ போய்ச் சேர்ந்தார். அவர் தங்கி உள்ள கவுல் பவனில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா ஆகியோரை அழைத்துக்கொண்டு, மாநில காங்கிரஸ் தலைமையகத்துக்கு சென்றார். அங்கும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரேபரேலி, அமேதி

அவரது தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

பிரியங்கா 11-ந் தேதியும் (இன்று) லக்னோவில் இருப்பார். 12-ந் தேதி, அவருடைய தாயாரான சோனியாகாந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலிக்கு செல்கிறார். 13-ந் தேதி, அமேதி தொகுதிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

பிரியங்கா, நிர்வாகிகளுடன் முக்கியமான ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார். முதலில் கட்சியின் வியூகம் வகுக்கும் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, மாநிலத்தின் சாதிகள் நிலவரம், கூட்டணி பலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கட்சியின் தேர்தல் வியூகம் வகுப்பார். மத்திய, மாநில அரசுகளின் தோல்விகளை மக்களிடையே பிரசாரம் செய்ய என்னென்ன பிரச்சினைகளை முன்னிறுத்தலாம் என்பது குறித்து வியூகம் அமைப்பார்.

வேட்பாளர் பட்டியல்

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து பிரியங்கா ஒப்புதல் அளிக்கிறார். வேட்பாளர்கள் பெயரையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். கட்சியை வலுப்படுத்தவும், தேர்தலை சந்திக்கவும் இதுவரை செய்யப்பட்ட ஆயத்த பணிகளை ஆய்வு செய்கிறார்.

கட்சியின் மாநில தேர்தல் கமிட்டியுடன் ஆலோசனை நடத்துகிறார். மண்டல வாரியான கூட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் பிரசார ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story