போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்


போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2021 12:57 AM GMT (Updated: 2021-09-11T06:27:51+05:30)

போர்டு நிறுவனத்தின் முடிவு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் குஜராத்தின் சனாந்தில் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவியிருந்தன. இந்த ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தப்போவதாக நேற்று முன்தினம் போர்டு நிறுவனம் திடீரென அறிவித்து உள்ளது. இறக்குமதி வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

போர்டு நிறுவனத்தின் இந்த முடிவு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முடிவு இந்திய வர்த்தக சூழலை எந்தவகையிலும் பாதிக்காது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவின் வாகன வளர்ச்சி விவகாரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் உயிர்ப்புடன் வளர்ந்து வருகிறது. போர்டு நிறுவனம் வெளியேறுவது சாத்தியமான செயல்பாட்டு காரணங்களுடன் தொடர்புடையது. இது இந்திய வாகன உற்பத்தி துறை அல்லது வணிகச்சூழலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்கவில்லை’ என தெரிவித்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் 3,500 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகள் இந்தியாவில் வந்திருப்பதாக கூறிய அவர், நாட்டின் வாகனத் துறை தொடர்ந்து கோடிக்கணக்கான டாலர் முதலீட்டை ஈர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story