பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு


பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 7:18 AM GMT (Updated: 11 Sep 2021 7:50 AM GMT)

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது  ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். 

பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டை பாரதியார் நூற்றாண்டு என முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இன்று பாரதியாரின் 100-வது  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு வெளியிட்டு மகாகவியை நினைவு கூர்ந்தார். 

இந்த நிலையில்,  உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும்; தமிழ் படிக்கவும் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறுவர்’’ எனக் கூறினார்.


Next Story