நான் ஒரு காஷ்மீர் பண்டிட் ராகுல்காந்தி பேச்சு : முதிர்ச்சியற்ற தன்மையின் வெளிப்பாடு - பாஜக விமர்சனம்


நான் ஒரு காஷ்மீர் பண்டிட் ராகுல்காந்தி பேச்சு : முதிர்ச்சியற்ற தன்மையின் வெளிப்பாடு - பாஜக விமர்சனம்
x
தினத்தந்தி 11 Sep 2021 12:04 PM GMT (Updated: 2021-09-11T17:34:47+05:30)

ஜம்மு -காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கு பேசியபோது, நான் ஒரு காஷ்மீர் பண்டிட் எனக் கூறினார். இதனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

ஜம்மு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜம்மு சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற மாதா வைஸ்ணவி தேவி கோவிலில் நேற்று முன்தினம் வழிபாடு செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜம்முவில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

மதம் மற்றும் பிராந்தியத்தின் பெயரில் ஜம்மு-காஷ்மீர் மக்களை பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் பிரிக்க முயற்சிக்கின்றன. மேலும் இங்குள்ள பன்முக கலாசாரத்தை உடைக்க பார்க்கின்றன. இதனால் கடும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளேன்.

மக்களிடையே வெறுப்பை பரப்புவதுடன், அவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பா.ஜனதா ஏற்படுத்துகிறது. ஆனால் அன்பு மற்றும் பாசத்தின் மறுபெயர்தான் காங்கிரஸ்.

காஷ்மீரின் அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் இங்குள்ள பன்முக கலாசாரத்தை பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் பலவீனப்படுத்துகின்றன.

காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பா.ஜனதா பறித்துக்கொண்டது. இதனால் காஷ்மீர் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும் பொருளாதாரத்தை சீரழித்தது குறித்தும் பா.ஜனதாவிடம் கேட்க வேண்டும்.

காஷ்மீர் பண்டிட் சகோதரர்களின் குழு ஒன்றை நான் சந்தித்தேன். நானும் அவர்களில் ஒருவன்தான். எனவே அவர்களுக்கு உதவுவேன் என அந்த சகோதரர்களுக்கு உறுதியளித்தேன் என்றார்.

 இதற்கு ஜம்மு -காஷ்மீர் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

காங்கிரஸ் தனது  வாக்கு வங்கிக்காக அரசியல் காஷ்மீர் பண்டிதர்களை மட்டுமல்ல, காஷ்மீரின் வளர்ச்சியையும் தியாகம் செய்து விட்டது. 

ஜம்மு -காஷ்மீரின் பிரச்சினைகள் நேரு குடும்பத்தால் ஏற்பட்டது, காஷ்மீர் பிரச்சினைகளுக்கு நேரு தான் காரணம். ராகுல் காந்தியின் செயல்பாடு முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு கூறியுள்ளது.

Next Story