கர்நாடக மேயர் தேர்தல் விவகாரத்தில் தேவேகவுடா முடிவுக்காக காத்திருக்கிறோம்: மல்லிகார்ஜுன கார்கே


கர்நாடக மேயர் தேர்தல் விவகாரத்தில் தேவேகவுடா முடிவுக்காக காத்திருக்கிறோம்: மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 11 Sep 2021 5:19 PM GMT (Updated: 11 Sep 2021 5:19 PM GMT)

கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தல் விவகாரத்தில் தேவேகவுடாவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மெஜாரிட்டி இல்லை
கலபுரகி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் மேயர் பதவியை கைப்பற்றுவதில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கலபுரகி மாநகராட்சி தேர்தலில் 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள ஜனதாதளம் (எஸ்) ஆதரவு அளிக்கும் கட்சிக்கே மேயர் பதவி கிடைக்கும்.இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் ஆதரவை பெற 2 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உண்மை தான்
கலபுரகி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று தனிக்கட்சியாக உள்ளது. மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேயர் பதவியை கைப்பற்ற பின்வாசல் வழியாக பா.ஜனதா முயற்சிக்கிறது. கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. கூட்டணி குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் நான் தொலைபேசியில் பேசியது உண்மை தான். கூட்டணி விவகாரம் சம்பந்தமாக தேவேகவுடாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. மாநகராட்சி மேயர் தேர்தல் விவகாரத்தில் தேவேகவுடாவின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அவர், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Next Story