திருப்பதியில் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் - தேவஸ்தானம் தகவல்


திருப்பதியில் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் - தேவஸ்தானம் தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2021 1:02 AM GMT (Updated: 12 Sep 2021 1:02 AM GMT)

திருப்பதி ஏழுமலையானை வழிபட சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக 300 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முக்கிய நபர்கள் தரிசனம் மட்டும் நடைபெற்று வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முதற்கட்டமாக சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் வழிபட சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக, திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

இதையறியாமல் தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திராவின் இதர மாவட்டங்களில் இருந்து பெருமளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து, திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

எனவே தெலுங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் இதர மாவட்டங்களை சேர்ந்த சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வர வேண்டாம். பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story