குஜராத் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு


குஜராத் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு
x
தினத்தந்தி 12 Sep 2021 10:55 AM GMT (Updated: 12 Sep 2021 10:55 AM GMT)

கட்லோடியா தொகுதி எம்.எல்.ஏவான பூபேந்திர படேல் குஜராத்தில் 17-வது முதல் மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.

அகமதாபாத்,

குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த மோடி, கடந்த 2014-ம் ஆண்டு இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் குஜராத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்தி பென் படேல் முதல்-மந்திரியானார்.
எனினும் 2 ஆண்டுகளில் இவர் மாற்றப்பட்டார். அதாவது 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர் பதவி விலகினார்.

இதைத்தொடர்ந்து ராஜ்கோட்டை சேர்ந்த விஜய் ரூபானி (வயது 65) குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவரது தலைமையின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2-வது முறையாக மீண்டும் குஜராத்தின் முதல்-மந்திரியானார். மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. 

இந்த நிலையில், குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்கும் என்று பாரதிய ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன. கட்லோடியா தொகுதி எம்.எல்.ஏவான பூபேந்திர படேல் குஜராத்தில் 17-வது முதல் மந்திரியாக பதவியேற்க இருக்கிறார். 


Next Story