குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார்


குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர படேல்  இன்று பதவியேற்கிறார்
x
தினத்தந்தி 13 Sep 2021 1:27 AM GMT (Updated: 13 Sep 2021 1:41 AM GMT)

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பதவியேற்க உள்ளார்.


காந்திநகர், 

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்தி பென் படேல் கடந்த 2016-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜய் ரூபானி. பின்னர் 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அவரது தலைமையில் கட்சி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் முதல்-மந்திரி பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் முதல்-மந்திரியாக 5 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் திடீரென விஜய் ரூபானி பதவி விலகினார். எனினும் இதற்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.

மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், விஜய் ரூபானியின் இந்த திடீர் ராஜினாமா முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
விஜய் ரூபானியின் ராஜினாமாவை தொடர்ந்து மாநிலத்தில் அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி நாடு முழுவதும் அனைத்து தரப்பிலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பா.ஜனதா சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், புதுமுக எம்.எல்.ஏ.வான பூபேந்திர படேல் (வயது 59), குஜராத்தின் புதிய முதல்-மந்திரியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை விஜய் ரூபானி முன்மொழிந்தார்.முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேலுக்கு கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

குஜராத்தின் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கிறார். இந்த தகவலை மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று முதல்-மந்திரி மட்டுமே பதவியேற்பதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின் ஓரிரு நாட்களில் புதிய மந்திரிசபை அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். துணை முதல்-மந்திரி பதவி தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அப்போது உடனிருந்த பூபேந்திர படேல், தன் மீது நம்பிக்கை வைத்து முதல்-மந்திரியாக தேர்வு செய்தமைக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Next Story