தேசிய செய்திகள்

குஜராத்தின் 17-வது முதல்-மந்திரியாக புபேந்திர படேல் பதவியேற்பு + "||" + Bhupendra Patel sworn-in as new Chief Minister of Gujarat

குஜராத்தின் 17-வது முதல்-மந்திரியாக புபேந்திர படேல் பதவியேற்பு

குஜராத்தின் 17-வது முதல்-மந்திரியாக புபேந்திர படேல் பதவியேற்பு
குஜராத்தின் புதிய முதல்-மந்திரியாக புபேந்திர படேல் பதவியேற்பு ஏற்றுக்கொண்டார். விஜய் ரூபானி ராஜினாமா செய்த நிலையில், புபேந்திர படேல் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

காந்திநகர்,

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்தி பென் படேல் கடந்த 2016-ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து அங்கு முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜய் ரூபானி. பின்னர் 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அவரது தலைமையில் கட்சி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் முதல்-மந்திரி பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் முதல்-மந்திரியாக 5 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் திடீரென விஜய் ரூபானி பதவி விலகினார். எனினும் இதற்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.

மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், விஜய் ரூபானியின் இந்த திடீர் ராஜினாமா முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

விஜய் ரூபானியின் ராஜினாமாவை தொடர்ந்து மாநிலத்தில் அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி நாடு முழுவதும் அனைத்து தரப்பிலும் ஏற்பட்டது.

குஜராத்தின் புதிய முதல்-மந்திரியாகும் வாய்ப்பு பெற்றவர்கள் பட்டியலில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் படேல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பா.ஜனதா சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று காலையில் நடந்தது. இதில் கட்சியை சேர்ந்த 112 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அத்துடன் கட்சியின் மேலிட பார்வையாளர்களான நரேந்திர சிங் தோமர், பிரகலாத் ஜோஷி, பொதுச்செயலாளர் தருண் சாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், புதுமுக எம்.எல்.ஏ.வான பூபேந்திர படேல் (வயது 59), குஜராத்தின் புதிய முதல்-மந்திரியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை விஜய் ரூபானி முன்மொழிந்தார்.

முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேலுக்கு கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் , குஜராத் மாநிலத்தின் 17-வது முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். காந்திநகரில் முதல்-மந்திரிக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2017 பேரவைத் தேர்தல் கட்லோடியா தொகுதியில் 1.17 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பூபேந்திர படேல் வெற்றி பெற்றார். பூபேந்திர படேல் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், மாநகராட்சி ஆணையர் நிலைக்குழு தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நான் அவருக்கு (குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்) எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையின் கீழ், கட்சி முன்னேறும் என, மாநிலத்தின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை உள்ளது. குஜராத் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக மாறும் என்றார்.