சரத்பவாரின் விமர்சனங்களை காங்கிரஸ் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்


சரத்பவாரின் விமர்சனங்களை காங்கிரஸ் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:02 PM GMT (Updated: 13 Sep 2021 8:02 PM GMT)

காங்கிரஸ் கட்சி குறித்த சரத்பவாரின் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சரத்பவார் விமர்சனம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சியை ஜமீன்தாருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதில் அவர், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி பலம்பெற்று இருந்த காலம் இருந்தது. இதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. உத்தரபிரதேசத்தில் ஒரு ஜமீன்தார் ஒரு காலத்தில் பெரும் நிலம் மற்றும் மாளிகை வைத்திருந்தார். பின்னர் அவர் பெரும்பாலான நிலத்தை இழந்தார். இதனால் மாளிகையை அவரால் சரிசெய்ய முடியவில்லை. இதேபோல தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது என கூறியிருந்தார்.

காங்கிரஸ் பதிலடி
இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், “நான் சிறிய காங்கிரஸ் தொண்டன். சரத்பவாரின் கருத்து குறித்து நான் எதுவும் கூறமாட்டேன். கடந்த காலங்களில் காங்கிரஸ் பல்வேறு தலைவர்களை வளர்த்தது. ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர் என சரத்பவாரின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.சரத்பவார் காங்கிரசில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரசை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களிக்க வேண்டும்...
இந்தநிலையில் சரத்பவாரின் பேச்சு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் நேற்று கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி தனியாக மாநில தேர்தலில் வெற்றி பெருகின்றனர். சரத்பவார் இதை முன்னிலை படுத்தியே பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதை நேர்மறையான சிந்தனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் சரத்பவாரின் முயற்சிகளுக்கு காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பங்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளும் சிவசேனா கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story