மராட்டியத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்


மராட்டியத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:19 PM GMT (Updated: 13 Sep 2021 8:19 PM GMT)

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் காலியான உள்ளாட்சி இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இதன்கீழ் சில மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தலும் நடைபெற்றது.இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை விசாரித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கியது. இதில் மாநில அரசு கொண்டுவந்த இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்ததுடன், தேர்தல் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் தாண்டக்கூடாது என உத்தரவிட்டது.

பொது தொகுதி
இதன்காரணமாக இடஒதுக்கீட்டின் கீழ் பலன் பெற்ற 6 மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 85 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 144 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிட்டது. காலியான இந்த வார்டுகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.இதற்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதி தற்போது பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையர் கூறியதாவது:-

பால்கர் மாவட்டம் சேர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் காலியாக உள்ள துலே, நந்தூர்பர், அகோலா, வாசிம், மற்றும் நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான இடைதேர்தல் ஜூலை 19-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்காக வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.முந்தைய அட்டவணையில் சேர்க்கப்படாத பால்கர் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.புதிதாக சேர்க்கப்பட்ட இந்த வார்டுகளுக்கு வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story