உத்தரபிரதேசத்தை இயக்கிய குண்டர்கள் ஜெயிலில் உள்ளனர்: பிரதமர் மோடி


உத்தரபிரதேசத்தை இயக்கிய குண்டர்கள் ஜெயிலில் உள்ளனர்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Sep 2021 4:59 PM GMT (Updated: 14 Sep 2021 4:59 PM GMT)

பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உத்தரபிரதேசத்தை இயக்கிய குண்டர்கள், தற்போது ஜெயிலில் உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

புதிய பல்கலைக்கழகம்
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்சிங் பெயரில் புதிய பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது.அலிகாரில் உள்ள லோதா கிராமத்தில் 92 ஏக்கர் பரப்பளவில் இப்பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது. 395 கல்லூரிகள், இதனுடன் இணைக்கப்படுகின்றன.நேற்று பிரதமர் மோடி பங்கேற்று, புதிய பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அலிகாரில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட்டார்.

மாபியாக்கள்

பின்னர், மோடி பேசியதாவது:-

2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உத்தரபிரதேசத்தை குண்டர்களும், மாபியாக்களும் இயக்கி வந்தனர். யோகி ஆதித்யநாத் வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அந்த நபர்கள் தற்போது ஜெயிலில் உள்ளனர்.அதுபோல், முன்பெல்லாம் ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இப்போது அந்த முட்டுக்கட்டைகள் இல்லாததால், திட்டங்களின் பலன்கள் உரியவரை சென்றடைகின்றன.

தளவாட உற்பத்தி
முன்பெல்லாம், பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. தற்போது, பாதுகாப்பு தளவாடங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது.நவீன கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், டிரோன்கள் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதிருப்தி
சுதந்திர போராட்ட வீரரான ராஜா மகேந்திர பிரதாப்சிங், மேற்கு உத்தரபிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குள்ள ஜாட் இனத்தை சேர்ந்தவர் ஆவார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக அந்த இனத்தினர், பா.ஜனதா மீது அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அவர்களின் அதிருப்தியை போக்குவதற்காக ராஜா மகேந்திர பிரதாப்சிங் பெயரில் யோகி ஆதித்யநாத் அரசு பல்கலைக்கழகம் அமைப்பதாக கருதப்படுகிறது.

Next Story