மேற்கு வங்காள பா.ஜ.க. எம்.பி. வீடு மீது குண்டுவீச்சு


மேற்கு வங்காள பா.ஜ.க. எம்.பி. வீடு மீது குண்டுவீச்சு
x
தினத்தந்தி 14 Sep 2021 5:13 PM GMT (Updated: 14 Sep 2021 5:13 PM GMT)

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பா.ஜ.க. எம்.பி. வீட்டின் மீது குண்டுவீச்சு நடந்துள்ளது. தன்னை கொல்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

2-வது முறையாக குண்டுவீச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் பேரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர், அர்ஜூன் சிங் (வயது 59). காங்கிரஸ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.க.வில் உள்ளார். இவரது வீடு, வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் பட்பராவில் உள்ளது.இந்த வீட்டின் மீது கடந்த 8-ந் தேதி குண்டுவீசப்பட்டது. இதுபற்றி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் அந்த வீட்டைக் குறிவைத்து குண்டு வீசப்பட்டதாகவும், அது வீட்டுக்கு வெளியே விழுந்து வெடித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

குற்றச்சாட்டு

இதுபற்றி அர்ஜூன் சிங் எம்.பி. கூறியதாவது:-

என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும், எனக்கு நெருக்கமானவர்களையும் கொல்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. மேற்கு வங்காளத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காஙகிரஸ் மறுத்துள்ளது. இதுபற்றி வடக்கு 24 பர்கனா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாரத்தா பவ்மிக் கருத்து தெரிவிக்கையில், “இந்த குண்டுவெடிப்புக்கு பா.ஜ.க. எம்.பி.தான் ஏதோ ஒரு விதத்தில் காரணம்” என கூறினார்.ஒரே வாரத்தில் 2-வது முறையாக பா.ஜ.க. எம்.பி. வீடு மீது குண்டுவீச்சு நடந்திருப்பது, மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story