குஜராத் மாநிலம் முன்னேற்ற பாதையில் சென்றால் ஒரே இரவில் முதல்-மந்திரி மாற்றப்பட்டது ஏன்? சிவசேனா கேள்வி


குஜராத் மாநிலம் முன்னேற்ற பாதையில் சென்றால் ஒரே இரவில் முதல்-மந்திரி மாற்றப்பட்டது ஏன்? சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 14 Sep 2021 7:44 PM GMT (Updated: 14 Sep 2021 7:44 PM GMT)

குஜராத் மாநிலம் முன்னேற்ற பாதையில் சென்றால், ஒரே இரவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மாற்றப்பட்டது ஏன் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

முதல்-மந்திரி மாற்றம்
குஜராத் முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி திடீரென தனது பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த பூபேந்திர படேல் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இந்த திடீர் மாற்றம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-

பலூன்கள் உடைப்பு
குஜராத் முதல்-மந்திரி திடீரென மாற்றப்பட்டுள்ளதன் மூலம் குஜராத் மாதிரி வளர்ச்சி, ஆட்சி மற்றும் ஜனநாயகம் என ஊதி பெருக்கப்பட்ட காற்று பலூன்கள் வெடித்து சிதறியுள்ளது.கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பூபேந்திர படேல் மந்திரியாக கூட இல்லை. ஆனால் அவர் நேரடியாக முதல்-மந்தியாக ஆக்கப்பட்டுள்ளார். குஜராத் உண்மையிலேயே முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது என்றால் பா.ஜனதா அதன் முதல்-மந்திரியை ஏன் ஒரே இரவில் மாற்றியது?பூபேந்திர படேல் முன்னாள் குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் படேலின் தீவிர ஆதரவாளர் ஆவார்.அதே நேரத்தில் ரூபானிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆதரவு இருந்தது. இது வரும் நாட்களை குழப்பமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்றும்.

தேவேந்திர பட்னாவிஸ் போல...
ஆமதாபாத்துக்கு அருகில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு தொழிற்சாலையை மூடியதால் சுமார் 40 ஆயிரம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது.கொரோனா 2-வது அலையின் போது குஜராத்தில் சுகாதார அமைப்பு கடுமையாக சேதமடைந்தது. கொரோனா கோர தாண்டவத்தால் மக்கள் உயிர்பலியை மாநில அரசு உதவ வழியின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் சுடுகாடுகளில் பிணங்கள் இடைவிடாமல் எரிக்கப்பட்டது மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.இதன்காரணம் 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டதை போல, வெளிச்சத்தில் இல்லாதவர்களுக்கு பா.ஜனதாவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story