மத்திய விஸ்டா திட்டம் : எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும்: பிரதமர் மோடி


மத்திய விஸ்டா திட்டம் : எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும்: பிரதமர் மோடி
x

மத்திய விஸ்டா திட்டம் குறித்து பொய்யுரைப்பவர்களின் எண்ணங்கள் வெட்டவெளிச்சமாகும்.எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி

டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத்துறையின் புதிய அலுவலக வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் தரைப்படை, கடற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புத்துறையின்  சுமார் 7,000 அதிகாரிகள் இடம் பெறும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த வளாகத்தை திறந்து வைத்தார்.மேலும் மத்திய விஸ்டா இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் ராணூவ மந்திரி  ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நரவனே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  பிரதமர் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின், அங்குள்ளவர்களிடம் பிரதமர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

டெல்லி இன்று புதிய இந்தியாவின் பார்வைக்கு ஏற்ப முன்னேறி வருகிறது. இந்தியா  ஜனநாயகத்தின் தாயாக போற்றப்படுகிறது. 

இந்த புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் அனைத்தும் நவீன வசதிகளுடனும் சிறந்த தொழில்நுட்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக தொழில் செய்வதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் நவீன உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

24 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அலுவலக வளாகத்தின் பணிகள் 12 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால் கொரோனா 19 காலத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

மத்திய விஸ்டா திட்டத்தின் பின்னணியில் உள்ள யோசனையும் இதுதான். புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமானம் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே முடிக்கப்படும். மத்திய விஸ்டா திட்டம் குறித்து பொய்யுரைப்பவர்களின் எண்ணங்கள் வெட்டவெளிச்சமாகும்.
 
முக்கியமான மத்திய விஸ்டா திட்டத்தை சிலர் எப்படி கெடுக்க முயன்றார்கள், சொந்த ஆதாயத்துக்காக தவறான தகவல்களை பரப்புவதற்கு அவர்கள் எப்படி முயன்று செயல்பட்டார்கள் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். ஆனால் குடிசைகளில் வாழும் மக்களை பற்றி அவர்கள் ஒரு முறை கூட பேசவில்லை.

அமைச்சகங்கள் எங்கிருந்து வேலை செய்கின்றன, புதிய பாதுகாப்பு அமைச்சக வளாகங்கள் எவ்வளவு முக்கியமானவை என்று அவர்கள் ஒருமுறை கூட பேசியதில்லை. அப்படி பேசியிருந்தால் அவர்களின் பொய்கள் வெளிப்பட்டிருக்கும் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய பாதுகாப்புத்துறை அலவலக வளாகம் நவீன வசதிகள், எரிசக்தி குறைவான தொழில்நுட்பம் மற்றும் விரிவான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் உள்ளன. கட்டிடத்தில் புதிய மற்றும் நீடித்த கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது இந்த கட்டிடத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

இது வழக்கமான ஆர்சிசி கட்டுமான காலத்தை விட 24- 30 மாதங்கள் குறைவான காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் மாசு ஏற்படாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளில் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்கள், நவீன, பாதுகாப்பான பணிச் சூழலை வழங்கும். கட்டிட செயல்பாடுகளை நிர்வகிக்க, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கும்.

Next Story