6 வயதுச் சிறுமி பலாத்காரம்-கொலை:தேடப்பட்டு வந்தவர் உடல் சிதறிய நிலையில் பிணமாக மீட்பு


6 வயதுச் சிறுமி பலாத்காரம்-கொலை:தேடப்பட்டு வந்தவர் உடல் சிதறிய நிலையில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 16 Sep 2021 10:05 AM GMT (Updated: 16 Sep 2021 10:05 AM GMT)

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 6 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், ரெயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் இன்று மீட்கப்பட்டார்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியில் 6 வயதுச் சிறுமியைக் கடந்த 9-ம் தேதி முதல் காணவில்லை. அதன்பின் மறுநாள் அந்தச் சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்குப் பின் பக்கத்து வீட்டுக்காரர் பல்லகொண்ட ராஜு தலைமறைவானார்.பின்னர் அவர் தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லகொண்ட ராஜுவைப் பிடிக்க ஐதராபாத் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர், அவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். 
இந்நிலையில் ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் இன்று காலை தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தியதில் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தது பல்லகொண்ட ராஜுவின் உடல் எனத் தெரியவந்தது.
 
இது தொடர்பாக தெலங்கானா  போலீஸ் டிஜிபி டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

தயவுசெய்து கவனிக்கவும். ஐதராபாத் சிங்கனேரி காலனியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர், கான்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ரெயில்வே இருப்புப் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலைக் கைப்பற்றி உடலின் அடையாளங்களை வைத்துச் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்து உள்ளது என கூறி உள்ளார்.

இதற்கிடையே, சிறுமி கொலை குறித்து தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி மல்லா ரெட்டி அளித்த பேட்டியில், 'சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி சிக்கினால், அவரை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும்' எனத் தெரிவித்து  இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story