குஜராத்தில் 24 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு!


குஜராத்தில் 24 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு!
x
தினத்தந்தி 16 Sep 2021 11:16 AM GMT (Updated: 16 Sep 2021 11:16 AM GMT)

முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த யாருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காந்திநகர், 

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் விதமாக விஜய் ரூபானியை முதல்-மந்திரி பதவியிலிருந்து பா.ஜனதா நீக்கியதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அவர் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து புதன்கிழமை அவரது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 24 பேர்களை கொண்ட குஜராத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. இந்த புதிய அமைச்சரவையில், விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் 24 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் 21 பேர் முதல்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரூபானி மாநில முதல்-மந்திரியாக இருந்தபொழுது மாநில சட்டமன்றத்தில் அவைத் தலைவராக இருந்தவர் ராஜேந்திர திரிவேதிக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மாநில பாஜக முன்னாள் தலைவராக இருந்த ஜீத் வாகனே தற்போது கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story