பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - பிரதமர் மோடி


பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Sep 2021 9:22 PM GMT (Updated: 17 Sep 2021 9:22 PM GMT)

என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கடந்த 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைத்துக்கொண்ட அவர், பின்னாளில் பா.ஜனதாவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்ற அவர், தனது அயராத உழைப்பு காரணமாக அந்த மாநிலத்தை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உருவாக்கினார்.

இதன் மூலம் நாட்டை வழிநடத்தும் பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிப்பாதையில் அழைத்து சென்ற அவர், தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

நாட்டின் வெற்றிகரமான பிரதமராக விளங்கி வரும் மோடிக்கு நேற்று 71-வது பிறந்த நாள் ஆகும். 

பிரதமரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு  திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா உள்ளிட்ட உலகதலைவர் கள், மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், 
தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில், அதற்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.  அவர் கூறியுள்ளதாவது:

என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகள் வாயிலாக நெகிழ செய்து விட்டீர்கள். நம் நாட்டுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவை அளிக்கின்றன.கொரோனா தடுப்பூசி பணியில் நேற்று சாதனை படைத்துள்ளோம். இதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.இதை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரது பணியும் மகத்தானது என்றார்.

Next Story