ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகனான கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்


ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகனான கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 17 Sep 2021 10:26 PM GMT (Updated: 17 Sep 2021 10:26 PM GMT)

பெங்களூருவில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகனான கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே பேகூருவில் வசித்து வருபவர் பகத்சிங். இவரது மகன் ராகுல் பண்டாரி(வயது 17). இவர், ராணுவ கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். பகத்சிங்கின் சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும். அவர் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக அவர் பெங்களூருவில் வசிக்கிறார். பெங்களூருவில் பிரபல நிறுவனத்தில் காவலாளியாக பகத்சிங் வேலை பார்த்து வருகிறார்.

ராகுல் தினமும் அதிகாலையிலேயே எழுந்து நடைபயிற்சி மற்றும் ஓடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதன்படி, நேற்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த ராகுல் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். வழக்கமாக தனது தாயிடம் சொல்லிவிட்டு தான் அவர் வெளியே செல்வது வழக்கம். ஆனால் நேற்று அதிகாலையில் தாயிடம் எதுவும் சொல்லாமல் வெளியே புறப்பட்டு சென்றிருந்தார்.

இதனால் ராகுலின் செல்போனுக்கு அவரது தாய் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுத்து பேசவில்லை. இந்த நிலையில், சதாசிவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திய விமானப்படை அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி பஸ் நிறுத்தம் முன்பாக தலையில் குண்டு காயத்துடன் ராகுல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகன ஓட்டிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சதாசிவநகர் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ராகுல் தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவருக்கு அருகே துப்பாக்கியும் கிடந்தது. மேலும் ராகுல் அருகே செல்போன் ஒலித்தபடி இருந்தது. உடனே எடுத்து போலீசார் பேசிய போது, மறுமுனையில் ராகுலின் தாய் பேசினார். அப்போது மகன் இறந்து கிடப்பது பற்றிய தகவலை போலீசார் தெரிவித்தனர்.

உடனே ராகுலின் பெற்றோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். தகவல் அறிந்ததும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் விரைந்து வந்து ராகுலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ராகுல் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தங்களது மகனின் உடலை பார்த்து பகத்சிங், அவரது மனைவி ஆகியோர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகனான ராகுல் தற்கொலை செய்திருக்கிறார். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தலையின் இடதுபுறமாக துப்பாக்கியை வைத்து சுட்டதில், ஒரு குண்டு பாய்ந்து வலது புறமாக வெளியே வந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே ராகுல் இறந்துள்ளார். ராகுல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அதுகுறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராகுல் தினமும் அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அதன்படி, நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த அவர், இந்திய விமானப்படை அலுவலகம் முன்பாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். அவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பதால், உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை வைத்திருந்தார். அந்த துப்பாக்கியால் சுட்டு கொண்டு ராகுல் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சியை ராகுலுக்கு அவரது தந்தை கற்றுக் கொடுத்திருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள், அங்கு கிடந்த துப்பாக்கி உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றார்கள். அதுபோல், ராகுலின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர் கடைசியாக யார், யாருடன் எல்லாம் பேசி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story