பாஜகவுடன் மீண்டும் சிவசேனா கூட்டணி அமைக்கிறதா? - உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு


பாஜகவுடன் மீண்டும் சிவசேனா கூட்டணி அமைக்கிறதா? -  உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sep 2021 9:02 AM GMT (Updated: 18 Sep 2021 10:02 AM GMT)

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது.  எனினும், அவ்வப்போது பாஜகவுடன் மீண்டும்  சிவசேனா கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுக்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில் அவுரங்கபாத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேவுடன் மத்திய மந்திரிகள் ராவ்சாகேப் தன்வே மற்றும் பகவத் சரத் இருவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் உத்தவ்தாக்கரே பேசுகையில், “இந்த விழாவில் என்னுடன் பங்கேற்றுள்ள எனது முன்னாள் தோழர்களை வரவேற்கிறேன். நாங்கள் ஒருங்கிணைந்தால் இவர்கள் எதிர்கால தோழர்களாக இருப்பார்கள்” என்றார்.

உத்தவ்தாக்கரேயின் இந்த பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே பா.ஜ.க. மத்திய மந்திரிகளை எதிர்கால நண்பர்கள் என்று குறிப்பிட்டதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சிவசேனா கூட்டணியை மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிய வந்துள்ளது.

அந்த விழாவில் முதல்- மந்திரி உத்தவ்தாக்கரே பேசுகையில், எனக்கு ரெயில்வே இலாகா மிகவும் பிடிக்கும். ரெயில்கள் தங்களது பாதையை மாற்ற இயலாது. ஆனால் மாற்றுப்பாதையில் இயக்கினால் நமது நிலையத்துக்கு வந்து விடலாம். ரெயில் என்ஜின் ஒருபோதும் தண்டவாளத்தை மாற்றிக் கொள்ளாது என்றார்.

உத்தவ்தாக்கரேயின் இந்த சூசகமான பேச்சு அவர் கூட்டணி மாறுவதை கருத்தில் கொண்டு பேசுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story