ராஜினாமா செய்கிறாரா பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்?


ராஜினாமா செய்கிறாரா பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்?
x
தினத்தந்தி 18 Sep 2021 9:57 AM GMT (Updated: 18 Sep 2021 11:12 AM GMT)

அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் பஞ்சாப் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அமிர்தரஸ்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அங்கு முதல் மந்திரியாக அமரீந்தர் சிங் தரப்புக்கும் காங்கிரஸ் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்து தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. 

இதற்கிடையில்,  அமரீந்தருக்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்து செயல்படுகிறார் என்று அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது.

அடுத்தடுத்த சலசலப்புகளால் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 50 முதல் 80 பேர் அமரீந்தர் சிங்கை முதல் மந்திரி பொறுப்பில்  இருந்து மாற்ற வேண்டும் என்று கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அமரீந்தர் சிங் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரீந்தர் சிங்கை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இதற்கிடையில்  அமரீந்தர் தனது ஆதரவாளர்களுடன் பஞ்சாப் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான அஜய் மாக்கென் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இதனால், பஞ்சாப் முதல்வர் ராஜினாமா குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story