உத்தர பிரதேசத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்


உத்தர பிரதேசத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 19 Sep 2021 3:50 AM GMT (Updated: 19 Sep 2021 3:50 AM GMT)

உத்தர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 250க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

லக்னோ,

நாட்டில் கொரோனா பாதிப்பு 2வது அலையின் தீவிரம் சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.  இந்த நிலையில், வடமாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.

இவற்றில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.  கடந்த 24 மணிநேரத்தில் (நேற்றைய நிலவரம்) 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  இதனால், மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது.  இவர்களில் 38 நோயாளிகள் குழந்தைகள் ஆவர்.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 22 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

22 பேரில் 17 பேர் ஜம்மு மாவட்டத்தினர் ஆவர். டெங்கு பரவலை தடுக்க புகை போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று உத்தர பிரதேசத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 250க்கும் மேற்பட்டோரும், டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இவர்களில் 10 குழந்தைகள் டெங்குவால் பாதிப்படைந்து உள்ளனர்.  இதுதவிர சில மலேரியா நோயாளிகளும் கான்பூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் இந்த பாதிப்புகளால் யாரும் உயிரிழக்கவில்லை என மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் சஞ்சய் காலா தெரிவித்து உள்ளார்.  டெங்கு பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.


Next Story