தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: தந்தையின் கள்ளத்தொடர்பே சாவுக்கு காரணம் + "||" + 4 commit suicide in the same family: Father's forgery is the cause of death - 3 letters written by daughters and son caught by the police

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: தந்தையின் கள்ளத்தொடர்பே சாவுக்கு காரணம்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: தந்தையின் கள்ளத்தொடர்பே சாவுக்கு காரணம்
பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரை மாய்த்த சம்பவத்தில் மகள்கள், மகன் எழுதி வைத்திருந்த 3 தற்கொலை கடிதங்கள் போலீசாருக்கு சிக்கியது. தந்தையின் கள்ளத்தொடர்பே குடும்ப பிரச்சினைக்குகும், தங்களது தற்கொலை முடிவுக்கும் காரணம் என கடிதத்தில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா, சேத்தன் சர்க்கிள் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். சங்கரின் மனைவி பாரதி ஆவார். இந்த தம்பதிக்கு சிஞ்சனா, சிந்துராணி என்ற மகள்களும், மதுசாகர் என்ற மகனும் இருந்தார்கள். சிஞ்சனா, சிந்துராணிக்கு திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். சிஞ்சனாவுக்கு 3 வயதில் பிரக்சா என்ற பெண் குழந்தை உள்ளது.

சிந்துராணிக்கு 9 மாதங்கள் ஆன ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பாரதி, சிஞ்சனா, சிந்துராணி, மதுசாகர் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்கள் 4 பேரும் தற்கொலை செய்திருந்தனர். சிந்துராணியின் 9 மாத குழந்தை பசியால் உயிர் இழந்திருந்தது. சிஞ்சனாவின் 3 வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருந்தது. இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், ஒவ்வொரு நாளும் 4 பேரின் தற்கொலைக்கும் புதுப்புது காரணங்கள் வெளியாகி வருகின்றன. சங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகள்கள் கணவருடன் சேர்ந்து வாழாமல் வீட்டில் இருந்த விவகாரம், மகனுக்கு பார் மற்றும் ரெஸ்டாரண்ட் வைத்து கொடுக்கும் விவகாரத்தில் மனைவி பாரதிக்கும், தனக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாகவும், இந்த தற்கொலைக்கு பாரதியே காரணம் எனற சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சங்கர் வீட்டில் நேற்று காலையில் உதவி போலீஸ் கமிஷனர் நஞ்சுண்டகவுடா தலைமையிலான போலீசார் திடீரென்று சோதனை நடத்தினாா்கள். சங்கர் வீட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது மதுசாகர் தற்கொலை செய்த அறையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதமும், சிஞ்சனா, சிந்துராணி தற்கொலை செய்திருந்த மற்ற 2 அறைகளில், அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதமும் சிக்கி இருந்தது. ஒட்டு மொத்தமாக 3 கடிதங்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தது.

அந்த கடிதத்தில் மதுசாகர், தனது தந்தைக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தந்தை சங்கர் மற்றும் தாய் பாரதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், எங்கள் வீட்டில் நடந்த அனைத்து குடும்ப பிரச்சினைக்கும் தந்தை சங்கரே காரணம் என்றும் எழுதி வைத்திருந்தார். அத்துடன் தன்னுடைய மடிக்கணினியில் தந்தை பற்றிய அனைத்து தகவல்களும் இருப்பதாக அந்த கடிதத்தில் மதுசாகர் எழுதி வைத்திருந்தார்.

அதுபோல், சிஞ்சனா மற்றும் சிந்துராணி எழுதி வைத்திருந்த கடிதத்தில் இந்த பிரச்சினைக்கு தந்தை சங்கரே காரணம். அவருக்கும், தாய்க்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணம் இந்த விபரீத முடிவை எடுக்க காரணம். எங்களது கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தியதால், பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தோம், பெற்றோர் வீட்டிலும் தொல்லை ஏற்பட்டதால், இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று சிஞ்சனா, சிந்துராணி தனித்தனியாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சங்கா் வீட்டில் இருந்த மதுசாகரின் மடிக்கணினி, சகோதரிகளின் 2 மடிக்கணினிகள் மற்றும் அவரது மனைவி, மகள்கள், மகன் பயன்படுத்தி வந்த 4 செல்போன்கள், ஒரு பென் டிரைவை போலீசாா் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர். மதுசாகரின் மடிக்கணினியில் சங்கர் பற்றி என்ன? தகவல்களை அவர் வைத்துள்ளார் என்பதை கண்டறிய, அதனை ஆய்வு செய்ய போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 4 பேரின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறாாகள். சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை போலீசார் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மேலும் சோதனையின் போது சங்கர், அவரது மருமகன்களும் வீட்டில் இருந்தாா்கள். மதுசாகர் தனது தந்தையின் கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து கடிதத்தில் கூறி இருப்பதால், அதுகுறித்து சங்கரிடம் பேடரஹள்ளி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள்கள், மகன் குற்றச்சாட்டால், 4 பேர் தற்கொலையில் சங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 பேர் தற்கொலை வழக்கில் 3 கடிதங்கள் சிக்கி இருப்பது புதிய திருப்பததை ஏற்படுததி உள்ளது.