மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு


மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 20 Sep 2021 5:50 AM GMT (Updated: 20 Sep 2021 5:50 AM GMT)

மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

போபால்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு பரவிய நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பாதிப்பு குறைவால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து, ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.  அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 1ந்தேதி முதல், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதனைத்தொடர்ந்து 50% மாணவர்களுடன் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன என மத்திய பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.  மாணவர்கள் முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி போபால் நகரில் உள்ள பள்ளி கூடத்தில் படித்து வரும் ஆலியா அலி என்ற மாணவி கூறும்போது, பள்ளிக்கு திரும்ப வருவது என்பது நல்லது என கூறியுள்ளார்.  அந்த பள்ளியின் முதல்வர் கூறும்போது, பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.


Next Story