அரசு அதிகாரிகள் குறித்து உமா பாரதியின் சர்ச்சை பேச்சு - சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Sep 2021 6:35 PM GMT (Updated: 20 Sep 2021 6:35 PM GMT)

அரசு அதிகாரிகளின் நிலை குறித்து உமா பாரதி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

போபால், 

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி, அரசு அதிகாரிகளின் நிலை பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

கடந்த சனிக்கிழமை போபாலில் தனது இல்லத்தில் பிற்படுத்தப்பட்டோர் மகாசபாவைச் சேர்ந்த குழுவினரை சந்தித்தார். அப்போது உமா பாரதியிடம் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் ஜாதிவாரி இடஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய அந்த குழுவினர், தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பாஜக அரசு நிறைவேற்ற மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்திருந்தனர்.

அப்போது அவர்களிடையே பேசிய உமா பாரதி, அதிகாரவர்க்கம் என்பது ஒன்றுமில்லை. நமது செருப்பை எடுத்து கொடுப்பதற்காகவே அதிகாரிகள் இங்கு பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு நிர்வாக திறமையின்மை இல்லை. இதனை இந்திய மக்களாகிய நாம்தான் அனுமதித்து உள்ளோம் என்று அவர் கூறினார். அவரது இந்த வீடியோ டுவிட்டரில் சில மணிநேரங்களில் வைரல் ஆகியது. 

இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் பணியாற்றும் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தனது கருத்துக்கு  உமா பாரதி மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ஓபிசி குழுவினர் என்னை சந்தித்தது அலுவல்பூர்வமற்ற வகையில் நடந்த நிகழ்வு. அவர்களுடன் எதேச்சையாக நான் கலந்துரையாடினேன். நல்ல உணர்வுடன் நான் வெளிப்படுத்த நினைத்த செய்திக்கு தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிப்பை வேண்டுகிறேன். பொது இடத்தில் குறைவான நபர்கள் இருந்தால் கூட மிதமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை இன்று நான் உணர்ந்து விட்டேன். உண்மையாக ஆட்சியை வழிநடத்துவரை நேர்மையான அதிகாரிகள் வர்க்கம் ஆதரிக்கவே செய்யும். அது நான் கண்ட அனுபவம்” என்று அவர் பதிவிட்டிருந்தார். 

Next Story