ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்


ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
x
தினத்தந்தி 21 Sep 2021 11:54 PM GMT (Updated: 21 Sep 2021 11:54 PM GMT)

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மோடிக்கு அழைப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் என உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.

முக்கியத்துவம் பெறுகிறது

கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய 2019-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடி, பிரேசில் நாட்டுக்கு சென்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பின்னர் அந்த ஆண்டிலும், கடந்த ஆண்டிலும் அவர் எந்தவொரு வெளிநாட்டுப்பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்த ஆண்டுதான் கடந்த மார்ச் மாதம் 26, 27-ந்தேதிகளில் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். கடைசியாக அவர் 2019-ம் ஆண்டு, இதே செப்டம்பர் மாதம் 20-27 தேதிகளில் அமெரிக்கா சென்று வந்தார். அப்போது அவர் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் திரண்டிருந்த ஹவ்டி மோடி (மோடி நலமா?) நிகழ்ச்சியில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு 2 ஆண்டுகள் ஆன நிலையிலும், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையிலும், மோடி அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை. எனவே அவரது இந்தப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், நேற்று முன்தினம் நியூயார்க் சென்றுள்ளார். பிரதமர் மோடியுடன் செல்கிற உயர் மட்டக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

குவாட் உச்சி மாநாடு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே, வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு, 24-ந்தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் முதல்முறையாக இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் நேரடியாக கலந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டில் பிராந்திய விவகாரங்கள், பாதுகாப்பு விவகாரங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல், இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம் உள்பட பல விஷயங்கள் பற்றி விரிவாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஜோ பைடனுடன் மோடி பேச்சு

குவாட் உச்சி மாநாட்டுக்கு இடையே (24-ந்தேதி), வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தான் நிலவரம், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்கிறார்கள்.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் நடத்துகிற சந்திப்பு, இரு தரப்பு உறவு மேலும் வலுப்பெற வழிவகுக்கும். மேலும், குவாட் அமைப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிசுடன் சந்திப்பு

ஜோ பைடனை சந்திப்பதற்கு முன்பாக நாளை (23-ந்தேதி), இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை மோடி சந்தித்து பேச உள்ளார். கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியான பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி பேசி இருந்தாலும், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை.

அமெரிக்கா-இந்தியா நல்லுறவு தழைப்பதில் கமலா ஹாரிஸ் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

100 தலைவர்கள் மத்தியில் மோடி பேச்சு

வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, நியூயார்க் நகருக்கு செல்கிறார். அங்கு 25-ந்தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் அவர் 100-க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் மத்தியில் பேசுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள சவால்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம், ஐ.நா. சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டியதின் தேவை, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டியதின் அவசியம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

26-ந்தேதி திரும்புகிறார்

பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி திரும்புகிறார்.

Next Story