பெண் விண்ணப்பதாரர்களை என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்


பெண் விண்ணப்பதாரர்களை  என்.டி.ஏ  நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sep 2021 5:28 AM GMT (Updated: 23 Sep 2021 5:28 AM GMT)

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத பெண் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும்

புதுடெல்லி, செப். 22 -

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள என்.டி.ஏ  நுழைவுத்தேர்வை  எழுத பெண் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. என்.டி.ஏ எனப்படும் தேசிய ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுத பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை நீக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
இது குறித்து, உச்சநீதிமன்றம் கூறியுள்ள அறிவிப்பில், பெண்களை சேர்த்துக் கொள்ள தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட போதிய சமயம் தேவைப்படலாம். ஆனால், அதை காரணம் காட்டி பெண் விண்ணப்பதாரர்களை சேர்ப்பதில் தாமதம் காட்டினால் அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும்.
இது குறித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பதாவது, பெண்கள் என்.டி.ஏ தேர்வை  எழுதுவதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டு அதன்பின்னர் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம்  இது குறித்த இடைக்கால உத்தரவை  பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம் செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் என்.டி.ஏ தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், தேர்வு நவம்பர் மாதம் 24 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பெண் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் , என்.டி.ஏ வில் பெண்களை சேர்க்கும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய  முன்னேற்பாடுகளுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கு அவர்களுடைய வயதுக்கேற்ற மருத்துவ அளவுகோள், வழங்கப்பட வேண்டிய பயிற்சி   முறைகள், எத்தனை பேரை எடுக்கலாம் என்கிற எண்ணிக்கை, அவர்கள் தங்குவதற்கான இடவசதிகள், தனி கழிவறைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.  மேலும் அதில், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட ராணுவப் பயிற்சியில் சிறிது தரம் குறைந்தாலும் அது ராணுவத்தின் போரிடும் திறனை குறைத்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஷ்வர்யா ஃபாட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இந்த பிரமாணப் பத்திரத்தில், ஒன்றிய அரசு பெண்களை   நிரந்தரமாக  சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story