'நீட்' தேர்வு விவகாரம் தமிழ்நாடு மாதிரியை மராட்டியம் பின்பற்ற வேண்டும்- மாநில காங்கிரஸ் தலைவர்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 Sep 2021 11:50 AM GMT (Updated: 23 Sep 2021 11:55 AM GMT)

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மாதிரியை மராட்டியம் பின்பற்ற வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மாதிரியை மராட்டியம் பின்பற்ற வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்படுவதாக கூறி, அவர்களுக்கு சமூக நீதி வழங்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் கடந்த 13&ந் தேதி மசோதா நிறைவேறியது. இந்த மசோதா 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கோருகிறது.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு மாதிரியில் மராட்டிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாய்ப்புகளை தட்டி பறிக்கிறது
மாநில கல்வி வாரிய மாணவர்களை விட சி.பி.எஸ்.இ. போன்ற மத்திய கல்வி வாரியங்களை சேர்ந்த மாணவர்கள் தான் நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுகின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சினை மற்றும் போலி மாணவர்கள் தேர்வு எழுதுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
நீட் தேர்வு அறிமுகத்துக்கு முன்பு தமிழகத்தில் 71.73 சதவீத மாணவர்கள் மாநில தேர்வு வாரியத்தில் இருந்து மருத்துவ கல்லூரிகளில் சேர முடிந்தது. சி.பி.எஸ்.இ. வாரியத்தை சேர்ந்த 0.13 சதவீத மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் 2020-21&ம் ஆண்டில் நீட் தேர்வு மூலம் மாநில கல்வி வாரியத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கல்லூரி சேர்க்கை சதவீதம் 48.22 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. சி.பி.எஸ்.இ. வாரிய மாணவர்களின் சதவீதம் 26.83 ஆக அதிகரித்தது. இது அநீதி மட்டும் அல்ல. சமத்துவமின்மை. மாநில கல்வி வாரிய மாணவர்களின் வாய்ப்புகளை நீட் தேர்வு தட்டிப்பறிக்கிறது. 
எனவே நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மாதிரியை மராட்டியமும் பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story