ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை இந்தியா வாங்குகிறது...


ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை இந்தியா வாங்குகிறது...
x
தினத்தந்தி 24 Sep 2021 1:01 PM GMT (Updated: 24 Sep 2021 1:01 PM GMT)

ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 சி-295 ரக ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அரோவ்-748 ரக விமானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட உள்ளது.

ஏர்பஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் படி ஏர் பஸ் நிறுவனம் முதற்கட்டமாக 16 சி-295 ராணுவ விமானங்களை இயக்க நிலையில் இந்தியாவிற்கு வழங்க வேண்டும். 

எஞ்சிய 40 விமானங்கள் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க வேண்டும். ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து எஞ்சிய 40 விமானங்களை தயாரிக்க வேண்டும். மேலும், இதற்கான தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனத்துடன் பகிர வேண்டும் என மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 



ஒப்பந்தம் செயல்பட்டிற்கு வந்த பின்னர் 4 ஆண்டுகளில் முதற்கட்டமாக 16 ராணுவ விமானங்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று ஏர்பஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை தொடர்பான கேபினெட் கூட்டத்தில் சி-295 ரக ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து ஏர்பஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 

40 ராணுவ விமானங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய வான்வெளி கட்டமைப்பிற்கு முதலீட்டையும், 15 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளையும், 10 ஆயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Next Story