கல்வான் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம்: இந்தியா


கல்வான் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம்: இந்தியா
x
தினத்தந்தி 24 Sep 2021 7:33 PM GMT (Updated: 24 Sep 2021 7:33 PM GMT)

பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம் என அந்த நாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு
கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டது. இதை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது இருநாட்டு வீரர்களுக்கு இடையே பயங்கர மோதலும், வன்முறையும் ஏற்பட்டது.

20 வீரர்கள் சாவு
பல பத்தாண்டுகளுக்குப்பிறகு எல்லையில் நடந்த இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டது.உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோதலுக்குப்பின் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் படைகளை குவித்துள்ளன. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.

அமைதி நடவடிக்கை
அதேநேரம் இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியை ஏற்படுத்தவும் இரு தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் பலனாக பங்கோங் சோ ஏரி, கோக்ரா போன்ற இடங்களில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கிக்கொண்டன.இதன் தொடர்ச்சியாக லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இரு தரப்பும் முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியா மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் லடாக்கில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு இந்தியாதான் காரணம் என சீனா தெரிவித்து உள்ளது.எல்லை தொடர்பாக போடப்பட்டு உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் இந்தியா மீறியதுடன், சீனாவின் பகுதிக்குள் எல்லை தாண்டி நுழைந்ததே இந்த மோதலுக்கு காரணம் என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சமீபத்தில் கூறியிருந்தார்.

மத்திய அரசு நிராகரிப்பு
சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்து உள்ளது. அத்துடன் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்து இருக்கிறது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தன்னிச்சையான முயற்சி
கல்வான் மோதல் தொடர்பான சீனாவின் கருத்துகளை நிராகரிக்கிறோம். கிழக்கு லடாக்கில் அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த ஆண்டு நடந்த மோதல் விவகாரத்தில் எங்கள் நிலை தெளிவாகவும், நிலையாகவும் உள்ளது.சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தை மற்றும் எல்லையின் இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சிகளே கல்வான் மோதலுக்கு கரணம் ஆகும்.

உறவு பாதிப்பு
இது இருநாட்டு பரஸ்பர உறவுகளிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த மாத தொடக்கத்தில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்தது போல, எல்லை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, கிழக்கு லடாக்கின் அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க சீனா நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story