மராட்டியத்தில் அக்டோபர் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Sep 2021 2:08 AM GMT (Updated: 25 Sep 2021 2:08 AM GMT)

மராட்டியத்தில் அக்டோபர் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வும் நடத்தப்படவில்லை. இதேபோல மற்ற வகுப்பு மாணவர்களும் இறுதி தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கொரோனா இல்லாத ஊரகப்பகுதிகளில் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது. கடந்த மாதம் 17-ந் தேதி முதல் தொற்று பாதிப்பு குறைந்த ஊரகப்பகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. அதே நேரத்தில் மும்பை, தானே, புனே உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

தற்போது மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. எனவே மும்பை போன்ற முக்கிய நகர்பகுதிகளில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

இந்தநிலையில் மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து உள்ளார். அதன்படி ஊரகப்பகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், நகர்புறங்களில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story