மும்பை ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பரம்பீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்; அரசுக்கு டி.ஜி.பி. பரிந்துரை


மும்பை ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பரம்பீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்; அரசுக்கு டி.ஜி.பி. பரிந்துரை
x

ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பரம்பீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே பரிந்துரை செய்து உள்ளார்.

உள்துறை மந்திரி மீது ஊழல் புகார்

மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ‘அண்டிலா‘ வீட்டின் அருகில் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கைது செய்யப்பட்டதை அடுத்து, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் போலீசாரை மும்பையில் உள்ள பார், ஓட்டல்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கூறியதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதற்கு அனில்தேஷ்முக் மறுப்பு தெரிவித்தார். எனினும் கோர்ட்டு உத்தரவை அடுத்து ஊழல் குற்றச்சாட்டு குறித்து அனில்தேஷ்முக் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதனால் அனில்தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை

இதன்பிறகு பரம்பீர் சிங் மீது மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பலர் புகார் அளித்தனர். இதில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்தது, பொய் வழக்கில் கைது செய்துவிடுவோம் என மிரட்டியது தொடர்பாக தானே, மும்பையில் 4 வழக்குகள் பரம்பீர் சிங் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பரம்பீர் சிங் மற்றும் உதவி கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய மாநில உள்துறைக்கு டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே பரிந்துரை செய்து உள்ளார். எனினும் இந்த பரிந்துரையை உள்துறை டி.ஜி.பி.க்கு திருப்பி அனுப்பி உள்ளது. உள்துறை ஒவ்வொரு அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டுகளை தனித்தனியாக விரிவாக கேட்டு பணியிடை நீக்க பரிந்துரையை டி.ஜி.பி.க்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story