'உலக நதி தினம்' நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் - பிரதமர் மோடி


உலக நதி தினம்  நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் -  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Sep 2021 6:14 AM GMT (Updated: 26 Sep 2021 6:14 AM GMT)

பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் 'உலக நதி தினம்' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
இந்நிலையில், 81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-

செப்டம்பர் ஒரு முக்கியமான மாதம், நாம் உலக நதி தினத்தை கொண்டாடக்கூடிய ஒரு மாதம். சுயநலமின்றி நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளின் பங்களிப்பை நினைவுகூரும் நாள் .

பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். மேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை உள்ளது.

கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது.  அங்குள்ள பெண்கள் மக்களை இணைந்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். 

அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு மீள் உயிர் அளித்துள்ளார்கள்.  நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.  நதிகளை போற்றி புகழ்கிறீர்கள், அன்னையர் என்கிறீர்கள், ஆனால் அவை ஏன் மாசுபட்டு போகின்றன? என கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. 

 நமது முறை வரும் போது நாம் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்

யாருக்காவது தடுப்பூசி போட வில்லை எனில் அவர்களையும் அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரவிருக்கும் பண்டிகைகாலத்தில் கொரோனா போராட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

Next Story