குலாப் புயல்: நள்ளிரவில் கரையை கடக்கும்; ஒடிசாவில் மீட்பு குழுக்கள் குவிப்பு


குலாப் புயல்:  நள்ளிரவில் கரையை கடக்கும்; ஒடிசாவில் மீட்பு குழுக்கள் குவிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2021 9:26 AM GMT (Updated: 26 Sep 2021 9:26 AM GMT)

ஒடிசாவில் குலாப் புயலை முன்னிட்டு பேரிடர், தீயணைப்பு துறையை சேர்ந்த மீட்பு குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன.

புவனேஸ்வர்,

வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது. அது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று உள்ளது.  இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள குலாப் புயல், ஒடிசா மாநிலம் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று கரையை கடக்கிறது.

இந்த நிலையில், ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையாளர் பி.கே. ஜெனா இன்று கூறும்போது, குலாப் புயலின் பாதை மற்றும் எந்த நேரத்தில் சரியாக கரையை கடக்கும் என்பது பற்றிய தெளிவான விவரங்கள் அடுத்த 2 முதல் 3 மணிநேரத்தில் தெரிய வரும்.

புயலானது நள்ளிரவில் கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச கூடும்.  கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.  சில இடங்களில் அதிகளவில் கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.

குலாப் புயலை எதிர்கொள்ள ஒடிசாவில் 42 பேரிடர் அதிரடி விரைவு படை குழுக்கள், 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மற்றும் 103 மாநில தீயணைப்பு துறை படையினர் ஆகியோர் குவிக்கப்பட்டு உள்ளனர்.  மக்களை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார்.


Next Story